சிறுவயதில் இருந்தே அடுத்த கபில்தேவ் ஆக விரும்பினேன்”-அஸ்வின்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த கபில்தேவை (434 விக்கெட்) பின்னுக்கு தள்ளிய தமிழக சுழற்பந்து வீச்சாளர் 35 வயதான ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

28 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லியின் (431 விக்கெட்) சாதனையை கபில்தேவ் முறியடித்த போது நான் எனது தந்தையுடன் சேர்ந்து பார்த்து உற்சாகம் அடைந்தேன். கபில்தேவின் விக்கெட் எண்ணிக்கையை தாண்டுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஏனெனில் நான் 8 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போது பேட்ஸ்மேனாக வேண்டும் என்றே விரும்பினேன்.
1994-ம் ஆண்டில், பேட்டிங் தான் எனது பிரதான ஆசையாக இருந்தது. அச்சமயம் சச்சின் தெண்டுல்கர் பேட்டிங்கில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். கபில்தேவ் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
அடுத்த கபில்தேவாக உருவெடுக்க வேண்டும் என்பதற்காக எனது தந்தையின் அறிவுரையின்படி சிறு வயதில் பேட்டிங் மட்டுமின்றி மிதவேகமாக பந்து வீசவும் பழகினேன். காலப்போக்கில் நான் ஆப்-ஸ்பின்னராக மாறிய பிறகு, இந்திய அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடி விட்டேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியில் கால்பதிப்பேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. இந்த சாதனையை நான் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.