கச்சா எண்ணெய் விலை உயருவது நமக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தும்..! – நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பா.ஜனதா நிர்வாகிகளுடன் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இது இந்திய பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதை சவாலாகவும், அதன் தாக்கத்தை குறைக்கவும் நாம் எந்த அளவுக்கு தயாராகிறோம் என்பதை பார்க்க வேண்டும். 85 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். ஆயில் விலை உயரும்போது அது கவலை தரக்கூடியதாக இருக்கும். அந்த கவலை எப்படி விலகி செல்லும் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்கள் சராசரியின் அடிப்படையில் எரிபொருள் விலையை நிர்ணயம் செய்கின்றன. தற்போது நாம் சராசரி மற்றும் சராசரியை தாண்டிய புள்ளி விவரங்கள் குறித்து பேசுகிறோம். வேறு ஆதாரங்கள் மூலம் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்ய முடியுமா? என்பது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. வெளிப்படையாக பார்ப்பதாக இருந்தால், உலக கச்சா எண்ணெய் சந்தைகளின் விலை நிலவரம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயருவது நமக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தும். இது தொடர்பாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்த நிதி ஒதுக்கீடு விலை ஏற்றத்திற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. அது தற்போது எதிர்பார்ப்பை தாண்டி விலை உயர்ந்துவிட்டது. இதை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதை பார்க்க வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயத்தை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவது தொடர்பான விவாதம் ஏற்கனவே தொடங்கியுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.