ஒருபுறம் சோகம்… மறுபுறம் நிம்மதி! பழங்கால போர் தந்திரம்!

உக்ரைன் அரசுடன் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, மறுபுறம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது ரஷ்யா. முக்கிய நகரங்களை எல்லாம் சுற்றி வளைத்துள்ள அது, உக்ரைன் சரணடைய வேண்டும் என்றே கருதுகிறது. அப்படி நடக்காத பட்சத்தில், உக்ரைனை அழிக்க வேண்டும் என்பது அதன் எண்ணமாக இருக்கிறது. எனவே, முதல் கட்டமாக உக்ரைனை சரணடைய செய்வதற்காக, பழைய கால போர் தந்திரத்தை அது பின்பற்றி வருகிறது. நகரத்தை சுற்றி ராணுவத்தை நிறுத்துவது, மக்களை வெளியேற விடாமல் தடுப்பது, அவர்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்காமல் செய்வது, இரவில் குண்டுமழை பொழிந்து அவர்களை தூங்க விடாமல் அச்சுறுத்துவது ஆகியவை இதில் அடங்கும். இதனால், மக்கள் படும் துன்பங்களை தாங்க முடியாமல், அதிபரை சரணடைய செய்வதே இதன் முக்கிய நோக்கம். பல்வேறு நகரங்களில் ரஷ்யா தற்போது இந்த முற்றுகை தந்திரத்தை பின்பற்றி வருகிறது.

* 20 லட்சம் அகதிகள்
உக்ரைன் போரால் அந்நாட்டவர்கள் 20 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து உள்ளதாக ஐநா புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், அதிகபட்சமாக 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அண்டை நாடான போலந்தில் தஞ்சமடைந்து உள்ளனர். பிற ஐரோப்பிய நாடுகளில் 1.83 லட்சம் பேரும் ஹங்கேரியில் 1.91 லட்சம் பேரும், சுலோவாகியாவில் 1.41 லட்சம் பேரும், மால்டோவாவில் 83 ஆயிரம் பேரும், ருமேனியாவில் 82 ஆயிரம் பேரும் தஞ்சமடைந்துள்ளனர். போரை தொடுத்துள்ள ரஷ்யாவில் 99 ஆயிரம் பேரும், பெலராசில் 450 பேரும் அகதிகளாக தஞ்சமடைந்து இருப்பதாக ஐநா புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உக்ரைனை விட்டு வெளியேறியவர்களில் 90 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

* ரஷ்ய தளபதி பலி
கார்கிவ் நகர் அருகே நடந்த தாக்குதலில் ரஷ்யாவின் 41வது படைப்பிரிவின் துணை காமண்டோவான மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோவ் உயிரிழந்ததாக உக்ரைன் ராணுவ அமைச்சகத்தின் உளவுப்பிரிவு தலைமை இயக்குனர் தகவல் வெளியிட்டுள்ளார். பலியான விட்டலி 2வது செசன்யா, சிரியா மீதான ரஷ்யாவின் போரில்பெரும் பங்காற்றியவர். உக்ரைனிடம் இருந்து கிரிமியா பகுதியை மீட்டதற்காக ரஷ்யா ராணுவத்தின் உயர் விருதை பெற்றவர். முன்னதாக, கடந்த மாத இறுதியில் ரஷ்ய ராணுவ உயர் அதிகாரி அந்தரி சுகோவெட்ஸ்கி இறந்ததாக உக்ரைன் தெரிவித்து இருந்தது. இதன்மூலம், ரஷ்யா தனது படையின் 2 முக்கிய அதிகாரிகளை இழந்துள்ளது. உக்ரைன் போரில் இதுவரை 11 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ரஷ்யா தரப்பில் 500 பேர் மட்டும் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* சடலங்களை இழுத்து செல்லும் நாய்கள்
உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், ‘கிழக்கு மற்றும் மத்திய உக்ரைனில் உள்ள நகரங்களில் ரஷ்யா போர் விமானங்கள் இரவில் குண்டுகளை வீசி தாக்குகிறது. தலைநகர் கீவ்வின் புறநகர் பகுதிகளில் குண்டுமழை பொழிகிறது. கீவ்வின் கிழக்கே உள்ள சுமி, ஓக்டிர்காவில் குடியிருப்பு கட்டிடங்களும், மின் உற்பத்தி நிலையும் அழிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் இறந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். சைட்டோமிர், கீவ்வுக்கு மேற்கே அமைந்துள்ள செர்னியாக்கிவ் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இரவு பகலாக கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதால், எங்களால் இறந்தவர்களின் உடல்களை சேகரிக்க முடியவில்லை. நகர தெருக்களில் சடலங்களை நாய்கள் இழுத்து செல்கின்றன,’ என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.