ரஷிய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்காத அமெரிக்கா..எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தடை விதிக்க தயக்கம்?
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது குறித்து அமெரிக்க அதிபர் ஜோபிடன் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவிற்கு பல விதங்களில் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷியாவுடனான மிக முக்கிய எரிவாயு ஒப்பந்தங்களை கூட ஐரோப்பிய நாடுகள் ரத்து செய்துவிட்டன. ஆனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை ரத்து செய்வது குறித்து ஜோபிடன் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று வெள்ளை மாளிகையின் ஊடக செயலர் ஜென் ப்ஸாகி கூறியுள்ளார்.
இது குறித்து ஐரோப்பிய நாடுகளுடன் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆனால் அமெரிக்காவில் கடந்த 14 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு எரிவாயு விலை உச்சம் தொட்டு இருப்பதே ரஷியா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்க தடை விதிக்க தயக்கம் காட்ட காரணம் என்று கூறப்படுகிறது. உக்ரைன் ரஷிய போர் காரணமாக கடந்த 1 வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் எரிவாயு விலை 11% அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஐரோப்பாவிலும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு தொடங்கியுள்ள சூழலில் அமெரிக்காவும் இதில் இருந்து தப்பவில்லை. எரிவாயு பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்காவும், ஐரோப்பாவும் மாற்று வழிகளை ஆராய தொடங்கியுள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.