ஓரிரு நாளில் தமிழக மாணவர்கள் முழுமையாக மீட்கப்படுவார்கள்: டெல்லியில் எம்பி திருச்சி சிவா தகவல்

 உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் தினமும் திரும்பிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் திமுக எம்பி திருச்சி சிவா அளித்த பேட்டியில், ‘‘உக்ரைன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தற்போது வரையில் 1196 மாணவர்கள் தமிழகம் வந்தடைந்துள்ளனர். இன்று(நேற்று) 200 பேர் வரவுள்ளனர். குறிப்பாக தங்களின் சொந்த செலவில் மட்டும் 257 மாணவர்கள் வந்துள்ளனர். இதைத்தவிர உக்ரைனில் நிலைமை சீராகி விடும் என தெரிவித்து 30 மாணவர்கள் வர விருப்பமில்லை என தெரிவித்துள்ளனர். சுமியில் மட்டும் 68 தமிழக மாணவர்கள் உள்ளனர். அவர்களும் விரைவில் வந்து விடுவார்கள்.

உக்ரைன் எல்லை பகுதியில் மட்டும் 167 தமிழக மீனவர்கள் உள்ளனர். இதையடுத்து வரவுள்ள விமானத்தில் அவர்களும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். ஓரிரு நாளில் உக்ரைன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அத்தனை தமிழக மாணவர்களும் முழுமையாக மீட்கப்படுவார்கள். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவாக்கிய சிறப்பு குழுவானது அவசியம் ஏற்படும் பட்சத்தில் கண்டிப்பாக தமிழக மாணவர்களை மீட்க உக்ரைன் மற்றும் அதன் எல்லை பகுதிகளுக்கு செல்வோம்’’ என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.