உக்ரைனில் 406 அப்பாவி மக்கள் பலி, 801 பேர் காயம், 17 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம் : ஐ.நா.கவலை!!

உக்ரைனில் ரஷிய படைகள் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இதுவரை 406 பேர் பொது மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் 17 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி இருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. உக்ரைனில் 13வது நாளாக தாக்குதலை தொடரும் ரஷியா, தலைநகர் கீவ் மற்றும் கார்க்கிவ், மரியுபோல், சுமி ஆகிய நாகரங்களை முற்றுகையிட்டு நிற்கிறது. போரில் பொது மக்கள் உயிரிழப்பதை தடுக்க அவர்களை பாதுகாப்பாக ரஷியா அல்லது பெலாரசுக்கு வெளியேற்றும் திட்டத்தை முன்மொழிந்த ரஷியா, அங்கெல்லாம் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஆனால் இதனை ஏற்க உக்ரைன் மறுத்துவிட்டது.

போர் நிறுத்தம் அறிவித்துள்ள இடங்களை தவிர மற்ற இடங்களில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சைடோமர் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. எண்ணெய் கிடங்கு பற்றி எறிந்த காட்சிகள் வெளியாகி [பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கக்கோவ் பகுதியில் ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது ரஷிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தலைநகர் கீவை ஒட்டியுள்ள இர்பின் நகரில் ரஷிய படைகள் தொடர்ந்து 2வது நாளாக உக்கிர தாக்குதலை நடத்தின. இர்பின் நகரில் அனைத்து வீடுகளும் குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த போரானது இனப்படுகொலை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை 406 பேர் பொது மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் 801 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. 17 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் புகுந்துவிட்டனர் என்றும் ஐ.நா. கூறியுள்ளது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.