கேரள மாநிலத்தில் களை கட்டும் சுற்றுலாத் தலங்கள்!!!

கேரளமாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அவ்வப்போது ஊரடங்கு தொடர்ந்து வந்த நிலையில் கோயில் திருவிழாக்கள், பொருட்காட்சிகள், திரையரங்குகள்,ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.கடந்த ஒரு மாதமாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த பட்டதோடு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கொரோனா தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து உள்ள நிலையில், பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றனர். பள்ளி கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் மீண்டும் முழுமையாக திறக்கப்பட்டு அரசு தனியார் நிறுவனங்கள் நூறு சதவீத பணியாளர்களுடன் இயங்க துவங்கியதோடு, சுற்றுலா தலங்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது.

மேலும் திரையரங்குகளும் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கலாம் என மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.இதைத் தொடர்ந்து வார விடுமுறை தினமான நேற்று பொதுமக்கள் அருவிகள், அணைக்கட்டுகள், பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.வாளையார் டேம், மலம்புழா டேம், அதிரப்பள்ளி அருவி, பாலக்காடு கோட்டை மைதானம், ஷாப்பிங் மால், திரையரங்குகளில் குடும்பத்தோடு வந்து மக்கள் பொழுதை கழிக்கின்றனர். வழிபாட்டுத்தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கோயில் திருவிழாக்கள் தற்போது கேரளாவில் வழக்கம் போல நடைபெற துவங்கி உள்ளன.இரண்டு ஆண்டு காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்கள் தற்போது தொற்று பரவல் அச்சத்தில் இருந்து விடுபட்டு  பொது வெளிகளில் உலாவருவதால் மீண்டும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என்ற நம்பிக்கை வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

47 பேருக்கு கொரோனா தொற்று
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பாலக்காடு மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று நேற்று பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.இத்துடன் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 143 ஆக உள்ளது. இவர்கள் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.