உடல் வலிமை பெற மூங்கில் அரிசி!!!
மூங்கில் பூப்பதும், அதில் அரிசி விளைவதும் ஓர் அரிய நிகழ்வு. மூங்கில் நெல் என்று ஒன்று இருக்கிறது. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப் பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும். மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் அல்லது பாயசம் போலவும் செய்து சாப்பிடலாம். மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துச் சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். மூட்டுவலியை குணமாக்கும். இன்று பலருக்கும் பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது, முழங்கால் மூட்டு வலிக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடைப்பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். அவர்கள் சாப்பிட்ட மூங்கில் அரிசிக் கஞ்சியின் விவரம் – மூங்கில் அரிசி, நொய் அரிசி – வகைக்கு 150 கிராம், சீரகம், ஓமம் – வகைக்கு அரைத் தேக்கரண்டி, பல்பூண்டு – 6, சுக்கு – ஒரு துண்டம், நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவைக்கு. மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில், நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும். இதை உண்பதால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும். மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்