திருப்பதியில் ஒரே மாதத்தில் 10.96 லட்சம் பேர் தரிசனம்!!

திருமலை: திருப்பதியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மாதத்தில் 10.96 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2021ம் ஆண்டில் வரலாற்றில் முதன்முறையாக மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிகளுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் தற்போது 90 சதவீதம் குறைந்துவிட்டதால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் எண்ணிக்கை  அதிகரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு கடந்த பிப்ரவரி மாதத்தில் 10 லட்சத்து 95 ஆயிரத்து 724 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்சமாக ஒரேமாதத்தில் 10.96 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேற்று அளித்த பேட்டியில், ‘2 ஆண்டுகளுக்கு பின்னர் இலவச தரிசனம் துவங்கியதை தொடர்ந்து, பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்ப பக்தர்களுக்கு காலை உணவு, அன்னபிரசாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்களுக்கு உணவுடன் ரொட்டியும், சப்பாத்தியும் விரைவில் வழங்கப்படும். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களுக்கான டிக்கெட் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற்ற அதே நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடிகிறது,’’ என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.