தமிழக மாணவர்கள் மீட்பு வெளியுறவு அமைச்சருடன் தமிழக குழு இன்று சந்திப்பு!

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தமிழக சிறப்பு குழு டெல்லியில் இன்று சந்தித்து பேசுகிறது. உக்ரைனில் போரினால் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை அழைத்து வருவது பற்றி உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, தமிழக மாணவர்களை விரைவாக மீட்டு வருவதற்காக அந்த நாடுகளுக்கு செல்லவும், அங்குள்ள இந்திய துாதரகங்களுடன் இணைந்து செயல்படவும் சிறப்பு குழு உருவாக்கப்பட்டது. இதில், திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் உள்ளனர்.

இவர்களுடன் அதுல்யா மிஸ்ரா, ஏ.கே.கமல் கிஷோர், எம்.பிரதீப் குமார், அஜய் யாதவ், கோவிந்த ராவ் மற்றும் ஜெசிந்தா லாசரஸ் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளும் செல்கின்றனர். இந்நிலையில், இந்த குழு டெல்லியில் இன்று வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கரை இன்று காலை 11 மணிக்கு சந்தித்து பேச உள்ளது. இதில், மாணவர்களை மீட்பது தொடர்பான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

செல்லும் நாடுகள்
* எம்பி திருச்சி சிவா, ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே.கமல் கிஷோர் – ஸ்லோவேக்கியா
* எம்பி கலாநிதி வீராசாமி, ஐஏஎஸ் அதிகாரி எம்.பிரதீப் குமார் – ஹங்கேரி
* எம்பி எம்.எம்.அப்துல்லா, ஐஏஎஸ் அதிகாரி அஜய் யாதவ் – ருமேனியா
* எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, ஐஏஎஸ் அதிகாரி எம்.கோவிந்தராவ் – போலந்து

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.