வேலையின்மை பற்றி வாய் திறக்காத மோடி: ராகுல் காந்தி கருத்து

வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, சமூக அமைதியின்மை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி வாய்திறப்பது கிடையாது,’ என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் மற்றும் சமூக அமைதியின்மை உள்ளிட்டவை நாட்டின் முன் உள்ள முக்கிய பிரச்னைகள்.

இவற்றின் காரணமாக இளைஞர்களிடையே மனஉளைச்சலும், கோபமும் அதிகரித்து வருகின்றது. இதுவே, அவர்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. ஆனால், தீர்வுகளுக்கு அப்பாற்பட்டு, இந்த விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவது கூட கிடையாது.  காங்கிரஸ் இந்த விவகாரங்களுக்காக தான் தொடர்ந்து அரசை விமர்சித்து வருகிறது. இந்த அடிப்படை பிரச்னைகளுக்கான பதிலை மக்கள் பிரதமரிடம் கேட்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.  

மேலும் அவர், ‘யாருடைய நல்ல நாட்கள்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்னைகள் தொடர்பான தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இம்மாநிலத்தில் நேற்று 6ம் கட்ட தேர்தல் நடந்த நிலையில் ஒருநாள் முன்னதாக இந்த வீடியோவை ராகுல் காந்தி வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.