முதல்வர் ஜெகனின் 3 தலைநகர் திட்டம் ரத்து:உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆந்திராவுக்கு ஏ.பி.சி.ஆர்.டி.ஏ. வடிவமைத்தபடி அமராவதியை தலைநகராக உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்,’ என்று ஆந்திர அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலங்கானா மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டது. அப்போது, ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகரமாக விளங்கிய ஐதராபாத், இருமாநிலங்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு பொது தலைநகரமாக விளங்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.  ஆனால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், 6 மாதங்கள் கூட ஆந்திராவின் தலைநகரமாக ஐதரபாத் விளங்கவில்லை.

இதனால், ஆந்திராவுக்கு அமராவதில் புதிய தலைநகரை உருவாக்குவதற்காக அறிவித்த சந்திரபாபு நாயுடு, அதற்காக விவசாயிகளிடம் இருந்து 34,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, அதே 2014ம் ஆண்டில் பிரதமர் மோடியை அழைத்து வந்து, அமராவதி தலைநகருக்கான அடிக்கல் நாட்டினார். ஆனால், ஆந்திராவில் 2019ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று, முதல்வராக ஜெகன் மோகன் பதவி ஏற்றார். இவர் வந்ததும் 3 இடங்களை தலைநகராக அறிவித்தார். ராயலசீமாவில்  கர்னூலில் உயர் நீதிமன்ற தலைநகராகவும், அமராவதியை சட்டசபை தலைநகராகவும், விசாகபட்டினத்தை  நிர்வாக தலைநகராகவும் அறிவித்தார்.

இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, 700 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ‘அமராவதி தலைநகருக்காகத்தான் நிலத்தை வழங்கினோம். ஆனால், அரசு தனது கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாமல், 3 தலைநகர் என்று அறிவித்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்,’ என்று மனுவில் அவர்கள் தெரிவித்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘அமராவதியை தலைநகரமாக உருவாக்க வேண்டும். இதற்காக, ஏ.பி.சி.ஆர்.டி.ஏ. என்னும் வழிகாட்டுதல் ஆணையம் அமைக்கப்படுகிறது,’ என்று உத்தரவிட்டது. ஆந்திர அரசு இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இதை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்றும் விசாரித்து, உத்தரவுகள் பிறப்பித்தது.

அதன் விவரம் வருமாறு:
ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை அமைப்பதற்காக அமைக்கப்பட்ட ஏ.பி.சி.ஆர்.டி.ஏ. வடிவமைத்தபடி தலைநகரம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான பணிகள் 6 மாதங்களில் தொடங்கப்பட வேண்டும். தலைநகரம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, ஒப்பந்தப்படி 3 மாதங்களில் சாலை, குடிநீர், கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து நிலங்களை வழங்க வேண்டும். 6 மாதங்களுக்குள் மாஸ்டர் நிலம் திட்டம் செயல்படுத்த வேண்டும். அமராவதி தலைநகராக தொடர வேண்டும் என வழக்கு தொடர்ந்த விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு தொகையை அரசு வழங்க வேண்டும்.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.