மாணவி தற்கொலை செய்த தஞ்சை பள்ளி மீது நடவடிக்கை பெற்றோருக்கு மனநல சிகிச்சை: தேசிய ஆணையம் பரிந்துரை
பதிவு செய்யப்படாமல் சட்ட விரோதமாக செயல்பட்ட தஞ்சாவூர் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கும்படி தேசிய குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் தற்கொலை செய்ததாக புகார்கள் எழுந்தது. . இது தொடர்பான விசாரணையை சிபிஐ.க்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு பதிலளிக்கும்படி மாணவியின் தந்தைக்கு கடந்த மாதம் 14ம் தேதி உத்தரவிட்டது. அதே நேரம், சிபிஐ தனது விசாரணையை தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், இந்த மாணவி தற்கொலை தொடர்பாக விசாரித்த தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம், நேற்று 10 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழக தலைமை செயலாளர், டிஜிபி.க்கு அனுப்பி உள்ளது.
அதில், கூறப்பட்டு இருப்பதாவது:
சட்டப்படி இந்த பள்ளி முறையாக பதிவு செய்யபடவில்லை. அதன் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மாணவியின் பெற்றோர், சகோதரருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும். அவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும். மாணவியின் தற்கொலைக்கு குடும்பத்தினர்தான் காரணம் என திசை திருப்ப, பள்ளி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. பள்ளி நிர்வாகம் தனிப்பட்ட முறையில் மாணவியிடம் வேலை வாங்கியுள்ளதும் விசாரணையில் உறுதியாகி உள்ளது.
அது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையம் தனது அறிக்கையில், மதமாற்ற தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.