பேச்சுவார்த்தை, ராஜாங்க ரீதியிலான பாதைக்கு திரும்ப வேண்டும் : மோடி வலியுறுத்தல்
உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என்று குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பருக்கு பிறகு குவாட் தலைவர்களின் அவசர உச்சி மாநாடு காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோபிடன், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மார்சன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ மற்றும் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் திறன் தன்மையை மேம்படுத்தும் அதன் முக்கிய நோக்கத்தில் குவாட் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அதே சமயம் உக்ரைன் விவகாரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட போது, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்ப வேண்டியதன் அவசியம் பற்றி மோடி வலியுறுத்தியதாக வெளியுறவுத் துறை செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐநா சாசனத்தை கடைபிடிப்பது, பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை அளிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குவாட் மாநாட்டிலும் ரஷியாவை இந்தியா நேரடியாக கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.