சமரச பேச்சில் ஈடுபட்ட பிரான்ஸ் அதிபரிடம் ரஷிய அதிபர் புதின் திட்டவட்டம்!!

ரஷியாவின் தொடர் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் உருக்குலைந்த நிலையில், அந்நாட்டின் மீதான தாக்குதலை குறைக்கப் போவதில்லை என ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.நேட்டோ அமைப்பின் உக்ரைன் சேர கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அதன் மீது 9 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. விமானங்கள் மூலம் தொடர்ந்து குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி தாக்கி வருவதால் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் சீர்குலைந்தன. அடுக்குமாடி கட்டிடங்கள் தீப்பற்றி எறிவது, சாலைகளில் வாகனங்கள் சிதறி கிடப்பது கட்டிட குவியல்கள் என கீவ் நகரம் காட்சி அளிக்கிறது. ரஷியாவின் உக்கிர தாக்குதலில் திரும்பும் திசையெல்லாம் நெருப்பு குழம்புகளும் புகையுமாக காணப்படுகிறது. முக்கிய நகரங்கள் மீது குண்டுகள் விழும் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 1.30 மணி நேரம் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுகோள் விடுத்தார். இதற்கு உக்ரைன் மீதான தாக்குதலை குறைக்கப் போவதில்லை என புதின் அளித்ததாக அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும், மனிதாபிமான அணுகலை அனுமதிக்கவும் புதினை பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தி உள்ளார். இதற்கு ஆதரவாக இருப்பதாக பதில் அளித்துள்ள புதின், ஆனால் எந்த உறுதிமொழியும் வழங்கவில்லை. தொடர்ந்து அந்த அறிக்கையில் புதின் உக்ரைன் நாட்டின் முழுமையையும் கைப்பற்றும் நோக்கத்தில் இருப்பதாகவும், உக்ரைனில் மோசமான நிலை வரப்போகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனை ‘டி -நாசிஃபை’ செய்யும் தனது நடவடிக்கையை இறுதிவரை மேற்கொள்வதில் அவர் உறுதியாக உள்ளதாகவும் புதின் மேக்ரானிடம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.