இந்தியர்களை பற்றி கவலைப்படாமல் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டுவதாக மம்தாபானர்ஜி தாக்கு!!!

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பற்றி கவலைப்படாமல் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், பாஜக மீது கடும் தாக்குதல் தொடுத்தார். வாரணாசியில் தமக்கு எதிராக இந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தியதன் மூலம் தேர்தலில் பாஜக தோல்வி அடைவது உறுதியாகி இருப்பதாக மம்தா கூறியுள்ளார்.

சுயசார்பு இந்தியா என முழக்கம் எழுப்பி மக்களை மோடி ஏமாற்றுவதாக அவர் குறிப்பிட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வேளாண் சட்டம், விமான நிலையம் தனியார் மையம், எல்ஐசியில் தனியார் முதலீடு, இது தான் சுயசார்பு இந்தியாவா என்று மம்தா கேள்வி எழுப்பினார். வாரணாசியில் சமாஜ்வாதி கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டமாக நாடாகும் தேர்தலில் கடைசி கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 10ம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கீதா.