இந்திய மாணவர்கள் யாரும் பணய கைதிகளாக பிடித்துவைக்கப்படவில்லை : ஒன்றிய வெளியுறவுத் துறை அறிக்கை!!

உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பணய கைதிகளாக பிடித்துவைக்கப்படவில்லை என்று ஒன்றிய  வெளியுறவுத் துறை விளக்கம்  அளித்துள்ளது. ரஷிய படையெடுப்பு காரணமாக உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேறி வரும் நிலையில், ரஷிய அதிபர் புதின் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  அந்த அறிக்கையில், ‘இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் பணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. மேலும் அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி, ரஷ்ய எல்லைக்கு செல்ல விடாமல் உக்ரைன் ராணுவம் தடுக்கிறது. உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுப்போம். இந்திய மாணவர்களின் பாதுகாப்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ரஷிய தரப்பின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பணய கைதிகளாக பிடித்துவைக்கப்படவில்லை. உக்ரைன் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் நேற்று கார்கில் நகரில் இருந்து பெரும்பாலான இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டனர். உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.இந்திய மாணவர்களை உக்ரைனின் மேற்கு பகுதிக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்க கோரியுள்ளோம்.கடந்த சில நாட்களாக ஏராளமான இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.ஏராளமான இந்தியர்கள் விரைவாக மீட்கப்பட்டதை சாத்தியமாக்கிய உக்ரைன் அதிகாரிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியர்களை தங்கள் எல்லைக்குள் அழைத்து தங்க இடம் அளித்ததற்காக உக்ரைனில் அண்டை நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.