இந்தியர்கள் அதிகளவில் குவிந்திருந்த நிலையில் நடத்தப்பட்ட தாக்குதலால் அதிர்ச்சி!!

மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் கீவ் ரயில் நிலையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உக்ரைன் மீது 8வது நாளாக ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.மோதல் தீவிரம் அடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். தலைநகர் கீவ் நகரத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் ஏறி ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மாணவ, மாணவிகளும் ரயிலில் பயணித்து அண்டை நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மீட்புப் பணிகள் நடைபெறும் கீவ் நகரின் தெற்கு ரயில்வே நிலையத்தில் அதிகளவிலான பொது மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் மீட்புப் பணிகள் நடைபெறும் கீவ் தெற்கு ரயில் நிலையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தும் காட்சிகளும் குண்டுகள் வெடித்து சிதறும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.ரயில் நிலையத்திற்கும் அதன் அருகே உள்ள ஐபிஐஎஸ் ஓட்டலுக்கும் இடையேயான பகுதியில் இந்த ஏவுகணை தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஏவுகணை தாக்குதலில் ரயில் நிலையத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகியது. இந்த ஏவுகணை தாக்குதலில் உயிரிழப்பு ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் கீவ் ரயில் நிலையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.