இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் 11 சதவீதம் அதிகரிப்பு

நைட் பிராங்க் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் உலக அளவிலான சொத்து விவர அறிக்கையை தயாரித்துள்ளது. அதில் 3 கோடி டாலர் (ரூ.226 கோடி) மற்றும் அதற்கு மேல் நிகர சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களை பெரும் பணக்காரர்களாக பட்டியலில் சேர்த்துள்ளது. 

இவர்களின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டு உலக அளவில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 828 ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 6 லட்சத்து 10 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு 12 ஆயிரத்து 287 ஆக இருந்த பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 13 ஆயிரத்து 637 ஆக அதிகரித்தது. ஒரே ஆண்டில் 11 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில், பெங்களூருவில்தான் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகபட்சமாக 17.1 சதவீதம் உயர்ந்துள்ளது. அங்கு 352 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். டெல்லி, மும்பை ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பங்குச்சந்தையின் வளர்ச்சியும், டிஜிட்டல் புரட்சியும்தான் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்று ‘நைட் பிராங்க்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2026-ம் ஆண்டுக்குள் பணக்காரர்கள் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

இதுதவிர, உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில், அமெரிக்கா 748 பெரும் பணக்காரர்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. சீனா 554 பேருடன் 2-ம் இடத்திலும், இந்தியா 145 பேருடன் 3-ம் இடத்திலும் உள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மகாலட்சுமி.