ரஷிய படையெடுப்பிற்கு எதிராக பல நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்கள்…

இன்று 5-வது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்று நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகின. கீவ் நகரை பிடிக்க ரஷிய படையினர் தீவிரமாக உள்ளனர். 

உக்ரைன்- ரஷிய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இத்தாலி என பல நாடுகளில் உக்ரைனுக்கு எதிரான ரஷிய தாக்குதலை எதிர்த்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
உக்ரைனின் கொடியின் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் உடையணிந்து, “நோ வேர்ல்டு வார் 3” மற்றும் “ரஷியன் கோ ஹோம்” போன்ற சுவரொட்டிகளை ஏந்தியபடி, நூறாயிரக்கணக்கான மக்கள் நேற்று உலகம் முழுவதும் தெருக்களில் இறங்கி உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெர்லினிலிருந்து பாக்தாத் வரை, வாஷிங்டனிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வரை, ஆர்ப்பாட்டக்காரர்கள் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக  “புதின் ஒரு கொலைகாரன்” என்று கோஷமிட்டனர், 
அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில், வெள்ளை மாளிகையின் முன் சில ஆயிரம் பேர் உக்ரேனிய மற்றும் அமெரிக்கக் கொடிகளை அசைத்த படி வந்தனர், அவர்கள் ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்னும் அதிகமான முயற்சிகளை மேற்க்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், கடுமையான எதிர்ப்பை மீறி கூடிய சுமார் 400 பேர் , “போர் வேண்டாம்”, “ரஷியர்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்” மற்றும் “உக்ரைனுக்கு அமைதி” என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வாரம் ஆயிரக்கணக்கான நபர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று நாடு முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் 2,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.