மக்கள் நலப்பணியாளர் விவகாரம் தமிழக அரசு கோரிக்கை: உச்ச நீதிமன்றம் ஏற்பு
புதுடெல்லி: ‘மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தீவிர ஆலோசனையில் இருப்பதால் சிறிது கால அவகாசம் வேண்டும்’ என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றது. மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13,500 பேர் கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அப்போதைய அரசு மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த தன்ராஜ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதுசார்ந்த முன்மொழி நடைமுறையில் உள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் நலப்பணியாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரகுநாத சேதுபதி, ‘‘பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர்களில் பலர் இறந்து விட்டனர். தற்போது சுமார் 7ஆயிரம் பேர் தான் உள்ளனர். அதிலும் பலர் ஓய்வு வயதை கடந்து விட்டனர். அதனால் இழுத்தடிக்காமல் உடனடியாக பணி வழங்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன், ‘‘மக்கள் நலப்பணியாளர்கள் மீது தமிழக அரசு அக்கறை கொண்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு தான் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. அதற்கான கால அவகாசம் தான் கொஞ்சம் தேவைப்படுகிறது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு தெரிவிக்கும். மேலும் இதுதொடர்பாக நான்கு வாரம் அவகாசம் கோரிய கடிதமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா விசாரணையை 4 வாரம் ஒத்திவைத்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.