மீட்பு பணியை ஒருங்கிணைக்க 4 அமைச்சர்கள் பயணம்?..

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று மீண்டும் உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறார். ரஷ்யா – உக்ரைன் எல்லையில் இன்று 5-வது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் தரப்பில் 250க்கும் மேற்பட்டோரும், ரஷ்யா தரப்பில் 1,000க்கும் மேற்பட்ட வீரர்களும், பொதுமக்களும் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதால், மக்கள் குடும்பம் குடும்பமாக தலைநகர் கீவில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகள் வழியாக வெளியேற்றும் பணியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வர ஹங்கேரி மற்றும் ருமேனியாவுக்கு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டிலிருந்து 249 இந்தியர்களுடன் 5வது சிறப்பு விமானம் இன்று டெல்லி வந்தடைந்தது. இதன்படி உக்ரைனில் இருந்து இதுவரை 4,000 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். இந்நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று மீண்டும் உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறார். உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு 4 ஒன்றிய அமைச்சசர்களை அனுப்பி இந்தியர்களை மீட்டு வருவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ ஆகியோரை உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உட்பட அனைவரையும் மீட்கும் பணியில் ஈடுபட அந்நாட்டின் அண்டை நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணியை அமைச்சர்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேற்றிரவு நடத்திய ஆலோசனையை தொடர்ந்து இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.