குடும்பத்தை பட்டினியிலிருந்து காப்பாற்ற சிறுநீரகம் விற்கும் ஆப்கன் மக்கள்..தாலிபான் அவலம்..!!

ஆப்கன்: ஆப்கனில் குழந்தைகள், குடும்பத்தை பட்டினியிலிருந்து காப்பாற்ற மக்கள் தங்கள் சிறுநீரகங்களை விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டில் வேலையின்மை அதிகரித்திருக்கிறது. வேலையின்மை, கடன் சுமை உள்ளிட்டவை காரணமாக ஆப்கன் மக்கள் பட்டினியுடன் தவிக்கின்றனர். தனது சிறுநீரகத்தை விற்காவிட்டால் குழந்தையை விற்கும் நிலை ஏற்படும் என்று ஆப்கன் பெண்கள் கதறுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரிக்க பல உலக நாடுகள் மறுத்து வருகின்றன. உலக வங்கி, சர்வதேச நிதியம் , அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆகியவை சர்வதேச நிதியைப் பயன்படுத்த ஆப்கனுக்கு தடை விதித்தன. இதனால் ஆப்கானிஸ்தானில் வேலையின்மை, வறுமை இறுகப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. பசி எனும் கொடிய நோய் மெல்ல தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. பொருளாதார வசதியில்லாத ஏழை எளிய மக்கள் அன்றாடம் பிழைப்பை நடத்த அள்ளல்படுகின்றனர்.

வீட்டில் இருக்கும் பிள்ளைச் செல்வங்களை விற்கும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், குடும்பத்தை பட்டினியிலிருந்து காப்பாற்ற ஆப்கன் மக்கள் சிறுநீரகம் விற்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.