உக்ரைன் பிரச்சனைக்கு அமெரிக்காவே காரணம்: வடகொரியா அதிபர் சாடல்

உக்ரைனின் மொத்த பிரச்சனைக்கும் அமெரிக்காவே காரணம் என வடகொரியா அதிபர் குற்றம் சாட்டினார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படைகளின் தாக்குதல் இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை நடந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 14 குழந்தைகள் உட்பட 352 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 1,684 பேர் காயமடைந்துள்ளனர். இதுவரை நடந்த சண்டையில், சுமார் 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது. மேலும், 146 டாங்கிகள், 27 விமானங்கள் மற்றும் 26 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன. உக்ரைனுக்கு 5.4 மில்லியன் டாலர் நிவாரண உதவியை அமெரிக்கா விடுவித்துள்ளது. பல நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தப்பிய உக்ரைன் மக்களின் எண்ணிக்கை 3.86 லட்சமாக உயர்ந்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இன்று இரவு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் பெலாரஸ் நாட்டிலா? அல்லது வேறு பகுதியில் நடக்குமா? என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் உக்ரைனின் மொத்த பிரச்சனைக்கும் அமெரிக்காவே காரணம் என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் குற்றம் சாட்டினார். மற்ற நாடுகளின் விவகாரங்களில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிடுவது அமெரிக்காவின் ஆணவத்தின் வெளிப்பாடு.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா இரண்டு நிலைப்பாட்டை கொண்டுள்ளது. அமைதியை நிலைநிறுத்த முயற்சிப்பதாக கூறி, மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது. அது மட்டுமின்றி மற்ற நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகளை எந்த காரணமும் இல்லாமல் கண்டிக்கிறது. அமெரிக்கா உலகத்தை ஆட்சி செய்த காலம் போய்விட்டது. ரஷ்யா தனது சட்டபூர்வ எல்லை பாதுகாப்பு கோரிக்கைகள் மீது அமெரிக்கா தனது ராணுவ மேலாதிக்க கொள்கைகளை கடைபிடிப்பதாகவும் வடகொரியா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.