இந்தியாவில் வருகிற ஜூன் மாதம் கொரோனா நான்காவது அலை தொடங்க வாய்ப்பு!

இந்தியாவில் வருகிற ஜூன் மாதம் கொரோனா நான்காவது அலை தொடங்க வாய்ப்புள்ளதாக ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் பரவி தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.  இதற்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசுகளும் தப்பவில்லை.  அந்நாடுகளில் தினசரி லட்சம் எண்ணிக்கையில் பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்நிலையில், டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமிக்ரான் என பல்வேறு திரிபுகளும் பாதிப்புகளை அதிகரித்து வருகின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நான்காவது அலையானது வரும் ஜூன் மாதம் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 24ம் தேதி வரை நீடிக்கும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அலையானது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை உச்சமடையும். அதன் பின்னர் குறைய தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், புதிய கொரோனா வகைகளின் வெளிப்படுதல் மற்றும் பூஸ்டர் டோஸ் உள்பட மக்களின் தடுப்பூசி நிலை ஆகியவற்றுக்கு ஏற்பவே, நான்காவது அலையின் கடுமை அமையும் என்று கூறப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.