முல்லைபெரியார் அணை குறித்து துணை கண்காணிப்பு குழு இன்று ஆய்வு..!!!
கேரளா: ஒன்றிய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமையில் முல்லைப் பெரியார் அணையில் இன்று துணை கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்துகிறது. முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக ஒன்றிய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்ஷன்ராஜ் தலைமையில் மூவர் கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழுவுக்கு உதவியாக 5 பேர் அடங்கிய துணை கண்காணிப்பு குழு ஒன்றிய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழுவில், தமிழக அரசு சார்பில் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் ஹரிகுமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில் ஒன்றிய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமையில் முல்லைப்பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்துகிறது. அணையின் நீர்மட்டம், அணை பராமரிப்பு பணிகள், நீர் அழுத்தம், நீர் கசிவின் அளவு உள்ளிட்டவைகளை இந்த குழு ஆய்வு செய்யும். ஆய்வு முடிந்த பிறகு, கும்பளே ஒன்றாம் மையிலில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் இந்த ஆய்வு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறும். ஆய்வின் அறிக்கையை குல்ஷன்ராஜ் தலைமையிலான மூவர் குழுவினருக்கு அனுப்பிவைக்கப்படும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.