உக்ரைனுக்கு உடனடி நிதி உதவி அளிக்க தயார்; உலக வங்கி அறிவிப்பு

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது.
உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என கூறிய ரஷியா, பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே படைகளை குவித்து வருகிறோம் என கூறியது.

அதே வேளையில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டு, அவர்கள் மூலம் உக்ரைனுக்குள் ஊடுருவதற்கான வேலைகளை ரஷியா செய்தது.

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த கூடும் என்ற சூழலில் பல்வேறு நாடுகளும் தங்களுடைய தூதர்களை திரும்ப பெற்றுள்ளன.  இதேபோன்று மாணவர்கள் உள்பட இந்தியர்களை நாடு திரும்ப மத்திய அரசும் உத்தரவிட்டது.  இதற்கேற்ப இந்திய அரசு, உக்ரைனில் இருந்து ஏர் இந்தியா விமானம் வழியே அவர்களை திருப்பி அழைக்கும் பணியை மேற்கொண்டது.

ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
இந்த நிலையில், உக்ரைனின் டான்பாஸ் பிரிவினைவாதப்பகுதி மக்களை பாதுகாக்க ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன் என்று கூறிய ரஷிய அதிபர் புதின் அதிரடியாக போர் பிரகடனம் வெளியிட்டார்.
உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, அந்நாட்டுக்குள் ரஷிய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார்.  உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்

இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவித்தன.
நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
ரஷியாவுடனான முதல் நாள் போரில் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காணொலியின் மூலமாக உரையாற்றிய அவர், ரஷிய படைகளின் பெரிய அளவிலான தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனியர்கள் 137 பேர் உயிரிழந்தனர். மேலும் 316 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.  அதில் எங்கள் இராணுவம் மற்றும் பொதுமக்கள் அடங்குவர் என்று கூறினார்.
தொடர்ந்து, உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவித்து உள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், உக்ரைனுக்கு உடனடியாக உதவிகள் வழங்க தயாராக இருக்கிறோம்.  அதிவேக நிதி பகிர்வு உள்பட உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.
இதுதவிர, உலக வங்கி குழுவானது உதவிகளை உடனடியாக வழங்குவதற்கு, எங்களுடைய அனைத்து நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உபகரணங்களை பயன்படுத்தி கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

உலக வங்கி குழுவின் தலைவர் டேவிட் மல்பாஸ், அதிர்ச்சிகர வன்முறை மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றால் உலக வங்கி குழுவானது அதிர்ச்சியடைந்து உள்ளது.  உக்ரைனின் நீண்டகால நண்பராக உள்ள நாங்கள், இந்த நெருக்கடியான தருணத்தில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவுடன் இருப்போம் என்றும் தெரிவித்து உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.