ரஷ்யாவின் அச்சுறுத்தல்: உக்ரைனில் அவசர நிலை பிறப்பிக்க முடிவு
ரஷ்யாவால் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் அவசர நிலை பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் உள்ள தங்கள் நாட்டு மக்களையும் வெளியேற உக்ரைன் கேட்டுக்கொண்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. தற்போது மீண்டும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா ராணுவத்தை குவித்து வருகிறது. இது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. அந்நாடு மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சூழல் நிலவிவருகிறது. எனவே உக்ரைனில் அடுத்த 30 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தேவைப்பட்டால் மேலும் 30 நாட்களுக்கும் இந்த அவசர நிலை நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள ‘குடியரசுகளை’ மாஸ்கோ அங்கீகரித்ததற்காக நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ள உக்ரைன் ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு தங்கள் நாட்டினருக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முயன்று வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.