உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இன்று 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி, உ.பி.யில் 9 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தம் 24 ஆயிரத்து 643 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடக்கும் மாவட்டங்களின் எல்லைகள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. 2 கோடியே 13 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 624 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இவற்றில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலி அடங்கிய ரேபரேலி மாவட்டமும், 4 விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த லக்கிம்பூர் கேரி மாவட்டமும் அடங்கும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.