உக்ரைன் நடவடிக்கைக்காக ரஷ்யா மீது பொருளாதார தடை- கனடா
உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு காரணமாக, உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ச்சியான பொருளாதார தடைகளை விதித்தார், ஜனாதிபதி விளாடிமிர் புதின் உக்ரைனின் பிரிவினைவாத பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றிற்கு ‘சுதந்திரத்தை’ அங்கீகரிப்பதாக அறிவித்ததை அடுத்து, ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்தார்.
இதுகுறித்து ட்ரூடோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “உக்ரைனில் ரஷ்யாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மற்றும் உலகம் முழுவதும் அமைதிக்கு அச்சுறுத்தலாகும்.மேலும் இது ஒரு இறையாண்மை அரசின் மீதான படையெடுப்பு ஆகும். இதனால் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து, கனடா முதல் சுற்று பொருளாதார தடை விதித்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.