‘ரஷியாவில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்’ – அமெரிக்கர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை ‘நேட்டோ’ அமைப்பில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளிடம் ரஷியா கோரிக்கை வைத்தது. ஆனால் ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்க நிராகரித்துவிட்டது. இதை தொடர்ந்து, உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா சுமார் 1½ லட்சம் படை வீரர்களை நிலைநிறுத்தி வைத்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என அச்சம் நிலவி வருகிறது..

உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா எல்லையில் படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்து வருகிறது. அதுமட்டும் இந்த விவகாரத்தில் உலக நாடுகளை ரஷியாவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் வான்வழி குண்டு வீச்சுடன் எந்த நேரத்திலும் ரஷியா படையெடுப்பை தொடங்கலாம் என்பதால் உக்ரைனில் வசிக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் அறிவித்தார்.
இதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது. அதை தொடர்ந்து 15-க்கும் மேற்பட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறும்படி தங்கள் நாட்டு குடிமக்களை அறிவுறுத்தின. ஒரு சில நாடுகள் உக்ரைனில் உள்ள தங்கள் தூதரகத்தை உடனடியாக காலி செய்தன. இந்தநிலையில், ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் உக்ரைனுடனான எல்லை பதற்றத்தை சுட்டிக்காட்டி ரஷியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஊடக ஆதாரங்களின்படி, மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட முக்கிய நகர்ப்புறங்களில் வணிக வளாகங்கள், ரெயில் மற்றும் மெட்ரோ நிலையங்கள், பொதுமக்கள் கூடும் பிற இடங்கள் மற்றும் ரஷிய எல்லையில் பதற்றம் அதிகரித்த பகுதிகளில் தாக்குதல் அச்சுறுத்தல்கள் உள்ளன.
எனவே அமெரிக்க குடிமக்கள் தனிப்பட்ட வெளியேறும் திட்டங்களை உருவாக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு திட்டங்களை மதிப்பாய்வு செய்யவும். அமெரிக்க அரசாங்க உதவியை நம்பாத வெளியேற்ற திட்டங்களை வைத்திருங்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.