ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி ரூ.2.58 லட்சம் கோடியாக உயர்வு
புதுடில்லி :கடந்த ஜனவரியில், இந்தியாவின் ஏற்றுமதி, 2 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது குறித்து மத்திய வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு ஜனவரியில் பொறியியல், பெட்ரோலியம், நவரத்தினங்கள் மற்றும் துறைகள் சிறப்பாக செயல்பட்டதால், ஏற்றுமதி, 25.28 சதவீதம் உயர்ந்து 2 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.அதே சமயம் இதே காலத்தில் நாட்டின் இறக்குமதி, 23.54 சதவீதம் உயர்ந்து, 3 லட்சத்து 89 ஆயிரத்து 475 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதியை விட இறக்குமதி உயர்ந்ததால், ஜனவரியில் வர்த்தகப் பற்றாக்குறை, 1 லட்சத்து 30 ஆயிரத்து 650 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு 2021 – 22ம் நிதியாண்டில், ஏப்., -ஜன., வரை ஏற்றுமதி, 46.73 சதவீதம் உயர்ந்து, 25 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 17 லட்சத்து 16 ஆயிரத்து 900 கோடி ரூபாயாக இருந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.