கனடாவில் பொருளாதார சீர்குலைவு அபாயம்..!

கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்கிற அரசின் உத்தரவை எதிர்த்து, கடந்த மாதம் 29-ந்தேதி தலைநகர் ஒட்டாவாவில் ‘சுதந்திர அணிவகுப்பு’ என்கிற பெயரில் லாரி டிரைவர்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது அந்த நாட்டின் அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.இந்த நிலையில் லாரி டிரைவர்களின் இந்த போராட்டத்தால் கனடா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு, நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்படும் அபாயம் உருவாகி இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு கவலை தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த நாட்டின் போக்குவரத்து மந்திரி ஒமர் அல்காப்ரா கூறுகையில் “அமெரிக்காவின் டெட்ரயாட் மற்றும் கனடாவின் வின்ட்சர் நகரை இணைக்கும் தூதர் பாலம், உலகின் மிக முக்கியமான எல்லை கடக்கும் பாலங்களில் ஒன்று. கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மொத்த வர்த்தகத்தில் 25 சதவீதம் இந்த பாலம் வழியாக நடக்கிறது. தற்போது இந்த பாலத்தை போராட்டக்காரர்கள் ஒரு வாரத்துக்கு மேலாக முற்றுகையிட்டு இருப்பதால் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் பாதிப்பட்டுள்ளது. இத்தகைய தடைகள் பொருளாதாரம் மற்றும் வினியோகச் சங்கிலிகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்” என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.