அதிமுக-திமுக இடையே காரசார விவாதம் : சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கூட நீட் தேர்வு நடத்தவில்லை, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போதுதான் நீட் தேர்வு நடந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கூறினார். அதனைத் தொடர்ந்து அதிமுக-திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்பேது, நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தனுஷ் குறித்தும் வாணியம்பாடி கஞ்சா விற்பனை தொடர்பாக சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

வாணியம்பாடியில் கஞ்சா விற்பனை செய்வதை தடுத்த சமூக ஆர்வலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசுகையில், வாணியம்பாடியில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இரும்புக்கரம் கொண்டு இந்த அரசு அடக்கும். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட உள்ளது. அதற்கு எதிர் கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து, திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு குறித்த தெளிவான அறிவிப்பை திமுக வெளியிடவில்லை என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பானிசாமி, திமுக ஆட்சி அமைந்த உடன் நீட் ரத்து செய்யப்படும் என தெரிவித்னர். ஆனால் ரத்து செய்யப்படவில்லை. இந்த அரசு எந்த தெளிவான முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக அரசு தொடர்ந்து சொல்லி வந்ததால், மாணவர்கள் தேர்வுக்கு தயார் செய்யாத நிலையில், தேர்வை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் அதிமுக நீட் தேர்வை எதிர்ப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி அப்போது கூறினார்.

Must Read : நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார்.