ரயில் பெட்டிகளும் விற்பனைக்கு… சுற்றுலாத் துறையை மேம்படுத்த மத்திய அரசின் திட்டம்!

ரயில்களை தனியாருக்கு விற்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவு செய்யப்பட்டு அதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. 2027-க்குள் 150 ரயில்களை தனியாருக்கு விடுவதற்காக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் வெறும் 3 நிறுவனங்கள் மட்டுமே ரயில்களை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன. அதனால், ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் மாற்றம் செய்து தனியார் நிறுவனங்களை ஈர்க்க ஆர்வம் காட்டுகிறது மத்திய அரசு.

இந்த சூழலில், ரயில் பெட்டிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடவும், விற்பனை செய்யவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுக்க நிர்வாக இயக்குநர் மட்டத்தில் குழு ஒன்றை ரயில்வே அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த திட்டப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் பெட்டியின் ஆயுள் வரை குத்தகைக்கு விட முடியும். குத்தகைக்கு எடுப்பவர் ரயில் பெட்டிகளை மாற்றி அமைக்கலாம்.

Also read: லாக் அப்பில் நிர்வாணம்: பெண் போலீசை ஈவ் டீசிங் செய்த கைதி!

அதனை வைத்து வர்த்தகத்தில் ஈடுபடலாம். மூன்றாம் நபரின் விளம்பரங்களை ரயில் பெட்டியில் இடம்பெறச் செய்யலாம். ரயில் பெட்டியை பயன்படுத்தும் வழி, செல்லும் இடங்கள், கட்டணம் உள்ளிட்டவை குறித்து குத்தகைக்கு எடுப்பவரே முடிவு செய்யலாம். ரயில் பெட்டி இழுவைக் கட்டணம், நிறுத்துவதற்கான கட்டணம் ஆகியவை குத்தகை கட்டணத்துடன் வசூலிக்கப்படும்.

ரயில் பெட்டிகளை விற்பதும் குத்தகைக்கு விடுவதும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.