தாலிபான்களால் தலைமறைவாக வாழும் 200 பெண் நீதிபதிகள்!

தாலிபான்களாலும், அவர்களால் விடுவிக்கப்பட்ட சிறைக் கைதிகளாலும் தங்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் ஆப்கனில் 200க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க படைகள் வெளியேற்றத்தை அடுத்து உத்வேகத்தை இழந்த ஆப்கன் அரசுப் படைகள் பின் வாங்கிய நிலையில் தாலிபான்களின் கை ஓங்கியது. ஒவ்வொரு மாகாண தலைநகராக கைப்பற்றி வந்த தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காபுலை கைப்பற்றி ஒட்டுமொத்த ஆப்கனையும் கையகப்படுத்தியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஆப்கானில் புதிய இடைக்கால ஆட்சியையும் தாலிபான்கள் நிறுவியுள்ளனர். அதே நேரத்தில் தாலிபான் அரசை அங்கீகரிப்பதில் சர்வதேச நாடுகள் தயக்கம் காட்டி வருவதுடன் இன்னமும் தெளிவான முடிவை எடுக்க முடியாமல் உள்ளனர்.

ஆப்கனில் மக்களாட்சியை நீக்கிவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள், கடந்த 1996 முதல் 2001 வரை கொடுங்கோன்மை ஆட்சி நடத்தியதால் ஆப்கன் பொதுமக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் உரிமை தாலிபான் ஆட்சியில் நசுக்கப்பட்டிருக்கிறது. பெண்களை குறிவைத்து தற்போது தாக்குதல்களும், கொலைகளும் ஆப்கனில் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Also Read: வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சிம் மோசடியால் ₹68 லட்சத்தை இழந்த வாடிக்கையாளர்!

காபுலை கைப்பற்றிய பின்னர் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த அல்கொய்தா பயங்கரவாதிகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றவாளிகளை தாலிபான்கள் விடுவித்தனர்.

இதனையடுத்து ஏற்கனவே பெண்கள் விஷயத்தில் கெடுபிடி காட்டும் தாலிபான்களாலும், முன்னதாக இதே கைதிகளுக்கு தண்டனை விதித்த பெண் நீதிபதிகள் சுமார் 200 பேர் உயிருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ‘தி இண்டிபெண்டண்ட்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Also Read: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி: பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சி!

38 வயது பெண் நீதிபதி ஒருவர் கூறுகையில், நாங்கர்கர் மாகாணத்தில் நான் வசித்து வந்த பகுதியில் இருந்து நான் வேறு இடத்தில் தலைமறைவாக இருக்கிறேன். எனது பகுதிக்கு சென்ற தாலிபான்கள் இங்கே பெண் நீதிபதிகள் யாரேனும் வசிக்கிறார்களா என விசாரித்துள்ளனர்.

தாலிபான்கள் என்னை கண்டுபிடித்துவிட்டால் நிச்சயம் என்னை கொலை செய்துவிடுவார்கள். நான் உண்மையில் அச்சத்தின் பிடியில் இருக்கிறேன். தாலிபான்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். தற்போது நான் வசிக்கும் பகுதிகளுக்கு வந்த தாலிபான்கள் இங்கு முன்னாள் அரசு அதிகாரிகள், பெண் ஊடகவியலாளர்கள் யாரும் வசிக்கிறார்களா என கேட்டுச் சென்றனர்.

Also Read: போலி ஆவணங்கள் மூலம் இட ஒதுக்கீடு: நீதிபதி நிரந்தர பணி நீக்கம்!

8 மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியை வன்கொடுமை செய்ததற்காக என்னால் தண்டனை பெற்ற இளம் தாலிபான் போராளி ஒருவன் என்னை கொடுமைப்படுத்துவதற்காக தேடி வருவதாக கேள்விப்பட்டேன்.

நான் அவனுக்கு தண்டனை கொடுக்கும்போதே, நான் வெளியே வரும் போது உன்னை என்ன செய்கிறேன் பார் என கூறினார். அப்போது இதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் இப்போது வெளியே வந்த பின் என்னை தொடர்பு கொண்டு மிரட்டினான், தொடர்ந்து மிரட்டி வருகிறான் என அந்த பெண் நீதிபதி தெரிவித்தார்.