பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர், திருச்சி சிறுகனூரில் பெரியாருக்கு 100 கோடியில் 95 அடியில் சிலை வைக்கப்படும் என அறிவித்து அனுமதி அளித்தார். இதையடுத்து, தமிழக அரசின் சார்பிலேயே பெரியாருக்கு 95 அடி உயர சிலை அமைக்கப்பட போவதாக பலரும் புரிந்துகொண்டு, அரசை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கீழடி ஆய்வில் கிடைக்கும் ஆதாரங்கள் பெருமைக்குரியவை இன்னும் நமது தொன்மையை கண்டுபிடிக்க வேண்டும். இதே போல் குமரி கண்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும். அப்போது தமிழன் உலகின் முதல் நிலை மனிதனாக உயர்ந்து நிற்பான் என்பதில் சந்தேகம் இல்லை.

சங்கம் வைத்து தமிழை வளர்த்த மதுரையை தமிழின் தலைநகராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தமிழ் மொழி குறித்த ஆய்வுகளை மதுரையை மையமாக வைத்து நடத்த வேண்டும்.

Also read: திருச்சியில் பெரியாருக்கு சிலை வைக்கக் கூடாது: ஆட்சியர் அலுவலகத்தில் அர்ஜூன் சம்பத் மனு

பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. பொதுவாக மறைந்த தலைவர்களுடைய நல்ல கருத்துகளை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும். வ.உ.சி சிலை மற்றும் மணிமண்டபம் குறித்து முதலமைச்சர் அறிவித்து உள்ளார். இது வரவேற்கத்தக்கது.

புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்கள் தமிழகம் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியேற்போம் என கூறினார்.