தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வுமையம்

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று, (செப்டம்பர் 10) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 10 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12 முதல் 13ஆம் தேதிவரையில், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14 ஆம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மத்திய வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். இதன் காரணமாக, வங்க கடல் பகுதிகள் 10ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை, மத்திய வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்க கடல் பகுதி, ஒரிசா – மேற்கு வங்க கடலோர பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Must Read : வாகனங்களின் வெளிப்புறத்தில் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள படங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

அரபிக்கடல் பகுதிகள்:

10 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.