விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு: சிலைகள் விற்பனை மந்தம்!

கொரோனா காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனைக் கடைகளின் எண்ணிக்கையும் விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுபோல், இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் & உச்சிப்பிள்ளையார் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.வழக்கமான தினசரி பூஜைகள் தடையின்றி நடைபெறும் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாணிக்க விநாயகர், உச்சிப்பிள்ளையாருக்கு வழக்கமாக தலா 75 கிலோ கொழுக்கட்டை படைக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு தலா 30 கிலோ எடையுள்ள கொழுக்கட்டைகள் படையல் செய்யப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி காந்தி சந்தை, பீம நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. சுமார் 1- 2 அடி உயரமுள்ள வண்ணம் பூசாத களிமண் சிலைகள் ₹ 30 – 100 வரைக்கும் வண்ணம் பூசிய சிலைகள் ₹ 100 – 500 வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. அருகம்புல், எருக்கம் பூ மாலைகள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க: ஷவருடன் குளியல் தொட்டி: ஆனந்த குளியல்போட்ட மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமி!

கொரோனாவால் இரண்டாவது ஆண்டாக விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள், பொருட்கள் விற்பனை கடைகளும் விற்பனையும் குறைந்துள்ளதாகவும் இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.திருச்சி மாநகரில் அரசு வழிகாட்டுதல் படி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில்லை. வீடுகளில் வழிபடலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்