தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும்: முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பி செவிலியர்கள் போராட்டம்

ஆறு வருடங்களாக ஒப்பந்த ஊழியர்களாக உள்ள செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2015ம் ஆண்டு மருத்துவ தேர்வாணைய வாரியத்தின் மூலம் தேர்வெழுதி அரசு செவிலியர் பணிகளில் ஒப்பந்த ஊழியர்களாக ரூ.7 ஆயிரம் சம்பளத்துக்கு பணியில் சேர்ந்வர்கள், தற்போது ரூ.14 ஆயிரம் ஊதியம் பெறுகின்றனர். இதே போன்று 2019ம் ஆண்டு தேர்வெழுதிய செவிலியர்களும் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்டனர்.

இது போன்று தேர்வு எழுதி ஒப்பந்த பணியில் இருக்கும் 15 ஆயிரம் செவிலியர்களில் 3,214 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதியின் படி மற்றவர்களையும் உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அஞ்சல் அட்டை மூலம் தங்கள் கோரிக்கையை முதல்வருக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் அஷ்வினி கூறுகையில், ” கடந்த ஆட்சியின் போது பல முறை நாங்கள் கோரிக்கை வைத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. தற்போது பொறுப்பேற்றிருக்கும் அரசின் தேர்தல் வாக்குறுதி 356ன் படி செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தது.

Also read: கோடநாட்டில் சிசிடிவி அகற்றப்பட்டது ஏன்? – மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்

ஆனால் இது வரை எங்களுக்கு சாதகமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே முதல்வரின் கவனத்தை ஈர்க்க செப்டம்பர் 1ம் தேதி முதல் இரண்டு வார காலம் அஞ்சல் அட்டை மல்ம் எங்கள் கோரிக்கையை அனுப்பி வருகிறோம்” என்றார்.
இது வரை சுமார் 2 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளன