பூட்டிய வீட்டில் பெண் சடலம்.. மாயமான காதல் கணவன் – போலீஸ் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டவர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். விவசாய கூலி தொழிலாளியான இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பூகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருந்து வருகின்றன. இந்த நிலையில் சிவப்பிரகாசத்திற்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சிவப்பிரகாசத்தை அவரது மனைவி பூமா பலமுறை கண்டித்தும் அவர் குடிப்பழகத்தில் இருந்து மீண்டு வரவில்லை. ஒருகட்டத்தில் அவருடன் சேர்ந்து பூமாவும் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானார். இதன் காரணமாக வீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இவர்கள் இருவருக்கும் கோபம் ஏற்படும்போது குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை இவர்கள் குடியிருக்கும் வீடு வெகுநேரமாக திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்து வீட்டிலிருந்து யாரும் வெளியே வராத நிலையில் சிவப்பிரகாசனின் தந்தை குப்புசாமி வீட்டில் இருந்த பசு மாடுகளுக்கு தண்ணீர் வைக்காமல் இருந்ததால் மாடுகளை ஓட்டிக்கொண்டு அவர் வயல்வெளி பகுதிக்கு மேய்ச்சலுக்காக சென்றார். பின்னர் மதியம் சுமார் 1.40 மணிக்கு திரும்பி வந்துள்ளார். அப்போதும் வீடு பூட்டி கிடந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த குப்புசாமி அருகில் இருந்தவர்களை அழைத்து அந்த வீட்டை திறந்துபார்க்குமாறு கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து எதிர் வீட்டில் இருந்த பெண் ஒருவர் அந்த வீட்டின் கதவை திறந்து பார்த்த பொழுது பூமா உள்ளே தூங்கிய நிலையில் இருந்துள்ளார். இந்த தகவல் உடனடியாக குப்புசாமிக்கு தெரியவந்ததை தொடர்ந்து அவர் வீட்டிற்குச் சென்றார். இதனிடையே பூகாவின் மகன் சபரிவாசன் தனது தாய்வழி பாட்டி வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார். அவர் வந்து பார்த்த பொழுது தாய் எழுந்திருக்காத நிலையில் பலமுறை அவரை எழுப்பியும் பலன் இல்லாததால் தனது தாயின் தந்தை வீட்டிற்கு சென்று பூமா எழுந்திருக்கவில்லை என்று தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூமா தலையில் காயம் ஏற்பட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக உளுந்தூர்பேட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமொழியன் ஆய்வாளர் ராஜா மற்றும் காவல்துறையினர் தலையில் காயத்துடன் இறந்து கிடந்த பூமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நேற்றுமுன்தினம் இரவு தனது மாமனார் வீட்டிற்கு சென்ற சிவப்பிரகாசம் இதுவரை வீடு திரும்பவில்லை என்று அவரது தந்தை குப்புசாமியும் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்