ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கமல்ஹாசன் வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சூழலைப் பாதிக்கும் எந்த உற்பத்தியையும் மூன்றாம் உலக நாடுகளில்தான் ஊக்குவிப்பார்கள். இந்த மனோபாவத்திற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என்பதன் அடையாளங்களுள் ஒன்று தான் ஸ்டெர்லைட். பின்தங்கிய பகுதிகளில் பேராபத்தை விளைவிக்கும் தொழிற்சாலைகளை அனுமதித்து செய்லபடுத்தி விடுகிறார்கள். பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி தேவைதான், வியாபாரம் தேவைதான். ஆனால், அது மக்களின் வாழ்வை அழித்துத்தான் நிகழவேண்டும் என்றால் அது பிள்ளைக்கறி கேட்பதற்கு ஒப்பானது என தெரிவித்துள்ளார்.
இந்த ஆலை இங்கே அமைய வேண்டும் என்று மக்கள் கேட்கவில்லை. வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு என அவர்கள் எளிதாக ஏமாற்றப்பட்டார்கள். ஆலையால் ஏற்பட்ட பொருளாதார அனுகூலங்களை விட ஆலை வெளிப்படுத்திய மாசுகளும் கழிவுகளும் இயற்கைக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்படுத்திய பாதிப்புகள் மிக மிக அதிகமாக இருந்தன. எதை விலையாகக் கொடுத்து எதைப் பெற்றிருக்கிறோம் என்பதை மக்களே உணர்ந்து ஒன்று திரண்டு போராடும்போது அந்தக் குரல் இரும்புக்கரம் கொண்டு ஓடுக்கப்பட்டது. இன்றும் அந்த இரும்புக்கரம் ஓய்ந்துவிடவில்லை. எப்படியாவது ஆலையைத் திறந்து மீண்டும் உற்பத்தியைத் துவங்கிவிட முடியாதா என அது சகல வழிகளிலும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறது.