ஆப்கானிஸ்தானின் 2வது பெரிய நகரும் வீழ்ந்தது!

காந்தகாரில் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. காந்தகார் நகர் தான் தலிபான்களின் பிறப்பிடமாகும். மேலும் முந்தைய காலகட்டத்தில் இந்நகரம் தலிபான்களின் வலுமிக்க பகுதியாக விளங்கியது.

காபுலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானின் 2வது பெரிய நகரமாக விளங்கும் காந்தகாரை கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் அரசுப் படைகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. காந்தகாரை தாங்கள் முழுமையாக கைப்பற்றிவிட்டதாக தலிபான் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதனை அரசுத் தரப்பில் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. பெரும்பாலான நகரங்களை சுற்றி வளைத்து தலிபான்கள் கடுமையாக தாக்குதலில் ஈடுபட்டு வருவது ஆளும் அஷ்ரஃப் கனி தலைமையிலான ஆப்கன் அரசுக்கு பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.