இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரி விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2014ஆம் ஆண்டு இந்திய அணியின் இயக்குனராக பொறுப்பேற்ற ரவி சாஸ்திரி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு 2017 ஆம் ஆண்டிலிருந்து முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் தலைமையில் இந்திய அணி 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி மற்றும் கடந்த மாதம் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியடைந்தாலும் மற்ற நாடுகளில் விளையாடும்போது சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கையில் டெஸ்ட் தொடரை முழுவதுமாக வென்றுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் வரலாற்று வெற்றிகளையும் பெற்றுள்ளது. 

இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை தோற்கடித்து சாதனை படைத்தது. மிகவும் பலம் பொருந்திய அணிகளாக கருதப்பட்ட நாடுகளை இந்திய அணி வெற்றி பெற்று வலுவான ஒரு கிரிக்கெட் அணியாக உயர்ந்தது. ரவி சாஸ்திரி இந்திய அணியை காப்பாற்ற வந்த ஜாம்பவான் என்று அனைவராலும் பேசப்பட்டார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கும் இடையே உள்ள புரிதல் அனைவரும் அறிந்ததே. இதன் விளைவுகள் பல ஆட்டங்களில் வெளிப்பட்டுள்ளன. ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களையும் வளர்த்துள்ளார்.