தி. நகர் உள்பட சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி.

சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் ஜூலை 30ஆம் தேதி நடைபெற்றது. இதில், எடுக்கபட்ட முக்கிய முடிவுகளின்படி, சென்னை தி.நகர் முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை; புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை; ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை; பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான வணிக வளாகங்கள் இருக்கும் 9 இடங்களில் கடந்த ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்டு 9ஆம் தேதி காலை 6 மணி வரை மூட உத்தரவிட்டு இருந்தார். 

அதன்படி மீண்டும் கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி வியாபாரிகள் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் இன்று முதல் கடைகளை திறக்க வணிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முககவசம் அணிதல், நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.