அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் யார்?

மதுசூதனின் மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர் என்ற வாதம் தமிழகத்தில் தற்போது எழுந்துள்ளது.

அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் கடந்த மாதம் 18ம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 20 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பிற்பகல் காலமானார்.

அவரது மறைவிற்கு அதிமுக உள்பட பிற அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, இன்று நடந்த மதுசூதனனின் இறுதி ஊர்வலத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்த கொண்டனர்.

இந்தநிலையில், அதிமுகவின் அடுத்த அவைத்தலைவர்
பதவி யாருக்கு என்ற பேச்சு தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர், இபிஎஸ் ஆதரவாளர் என ஒருபுறம் இருக்க, முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார் மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் அவைத் தலைவருக்கான போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே கவுண்டர்களின் கட்சியாக அதிமுக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருவதால், செங்கோட்டையனுக்கு வாய்ப்பு குறைவுதான். அதேவேளையில்
வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு வழங்கியதால் கேபி அன்பழகனும் ஓரங்கட்டப்படுவார்.

சீனியரும், சபாநாயகராக இருந்தவருமான தனபாலுக்கு வாய்ப்பிருக்கிறது. சசிகலா அதிமுகவைக் கைப்பற்ற பல்வேறு வழிகளை தேடி வரும் நிலையில், கட்சியின் முக்கிய பொறுப்பான அவைத் தலைவராக இருந்து அவருக்கு நிகராக தனபால் பதிலடி கொடுப்பாரா..? என்பதே சந்தேகம்தான்.

வன்னியர் உள்இடஒதுக்கீட்டால் தென்மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். எனவே, அவர்களை சாந்தப்படுத்தும் விதமாக முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசனை அந்தப் பதவிக்கு கொண்டு வரலாம். ஆனால், அவருக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சீனியர் என்ற அடிப்படையில் இருக்கிறார். அவரை விலக்கி விட்டு திண்டுக்கல் சீனிவாசனை முன்னிலைப்படுத்த கட்சி தலைமை தயக்கம் காட்டும் என்பதே உண்மை.

அதுமட்டுமில்லாமல், திண்டுக்கல் சீனிவாசனை விட பேச்சாற்றலும், தைரியமும் மிக்க தலைவராக ஜெயக்குமார் இருக்கிறார். சசிகலாவை சரிகட்ட அவரே சரியான ஆளாக அடையாளம் காட்டப்படுவார். அதுமட்டுமில்லாமல் அவைத் தலைவருக்கான போட்டியில் இருப்பவர்கள் எம்எல்ஏக்கள். ஆனால், ஜெயக்குமார் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார். எனவே, அவரது ஆதரவாளர்களும் ஏதேனும் புதிய பொறுப்பை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தே இருந்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை நபராகவும் அவர் இருப்பதால், அதிமுகவின் சாய்ஸ் ஜெயக்குமாராகத்தான் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. பொன்னையன், வளர்மதி பெயர்கள் எல்லாம் அவைத்தலைவர் பொறுப்புக்கு அடிபடுகின்றன. ஆனால், பொன்னையன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். வளர்மதிக்கு தற்போதுதான் மாநில மகளிரணி பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதனால், அவர்கள் வருவதற்கான வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

S.MD.RAWOOF