மணப்பாறை அருகே கல்குவாரியில் ஹிட்டாட்சி இயந்திரத்தில் சிக்கி ஓட்டுனர் உயிரிழப்பு.

மணப்பாறை ஆக2: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் குவாரியில் திங்கட்கிழமை ஹிட்டாட்சி இயந்திரத்தில் சிக்கி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் நல்லு மகன் மணிவேல்(35). இவர் மணப்பாறை அடுத்த சாம்பட்டியில் உள்ள தனியார் குவாரியில் பாறை உடைக்கும் ஹிட்டாட்சி இயந்திரத்தினை இயக்கும் பணியில் கடந்த சில காலங்களாக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம்போல் திங்கட்கிழமை பாறை உடைக்கும் பணியில் மணிவேல் இருந்துள்ளார். சிறிது நேரத்தில் இயந்திரத்திலிருந்து மாறுப்பட்ட சத்தம் கேட்டதையடுத்து அருகில் பணியிலிருந்தவர் ஓடி சென்று பார்த்தபோது, மணிவேல் ஹிட்டாட்சி இயந்திரத்திற்கும் ஓட்டுனர் அமர்ந்திருக்கும் பகுதிக்குமிடையே சிக்கி இருந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து மற்றொரு ஓட்டுனர் வரவழைக்கப்பட்டு இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்தி பார்த்தபோது மணிவேல் உயிரிழந்திருந்தார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை காவல் ஆய்வாளர் மணமல்லி மற்றும் உதவி ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் நிகழ்விடத்தில் தடயவியல் நிபுணர்கள் மூலம் விசாரணை மேற்கொண்ட பின் இயந்திரத்தில் சிக்கியிருந்த உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மணப்பாறை போலீஸார் மணிவேல் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்,
P.பாலு மணப்பாறை செய்தியாளர்