துயரமான நாள்: கடைசி 15 நிமிடத்தில் சரிவு கண்ட இந்திய ஹாக்கி அணி- வெண்கலப் பதக்கம் வெல்ல வாய்ப்பு

உலக சாம்பியன் பெல்ஜியம் அணிக்கு எதிராக இந்திய ஆடவர் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதியில் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவினாலும் வெண்கலப்பதக்க வாய்ப்பு இன்னும் பிரகாசமாக உள்ளது.

கடைசி 15 நிமிடங்களில் இந்திய அணியின் முக்கிய வீர்ர் ஹர்மன்பிரீத் சிங் பச்சை அட்டை காட்டப்பட்டு பெஞ்சில் அமர வைக்கப்பட்டதையடுத்து இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது, கடைசியில் எப்படியாவது கோலை அடிக்க வேண்டும் என்ற முயற்சியில் கோலை காலியாக விட்டு விட்டு இன்னொரு வீரரை கோல் கீப்பர் ஸ்ரீஜேஷுக்கு பதிலாக இறக்கிப் பார்த்தது இந்திய அணி ஆனால் இது பெல்ஜியத்தின் 5வது கோல் காலி கோலில் போடப்பட்டதே தவிர இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய கேப்டன் மன்ப்ரீத் சிங் வெண்கலப்பதக்கம் வெல்ல பாடுபடுவோம் என்று நம்பிக்கை அளித்துள்ளார். ஆஸ்திரேலியா-ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான மற்றொரு அரையிறுதியில் தோல்வியடையும் அணியுடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கப் போட்டியில் ஆட வேண்டும்.