வாயு தொல்லை நீக்கும் அற்புத மூலிகை சூப் இப்படி செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் பலப்படுமே!

மூலிகை சூப் செய்ய தேவையான பொருட்கள்: கற்பூரவள்ளி இலை – 10, ஓமம் – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், மிளகு – 4, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 4 பல், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, வெற்றிலை – நான்கு, நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவிற்கு. மூலிகை சூப் செய்முறை விளக்கம்: முதலில் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு, கற்பூரவள்ளி இலை, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பிறகு மற்றொரு வாணலியில் கொஞ்சமாக நெய் சேர்த்து காய விடுங்கள். பின்னர் அதில் சீரகம், தனியா, மிளகு, சோம்பு, ஓமம், பூண்டு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கி பின்னர் வதக்கி வைத்துள்ள கற்பூரவல்லி இலை மற்றும் வெற்றிலையும் சேர்த்து கொள்ளுங்கள். பின் அதனுடன் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். கொதித்து சூப் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாற வேண்டியது தான்.