நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சைபர் குற்றங்களை தடுக்க முதல்வர் வலியுறுத்தல்…
தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 86 காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழா, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் பயிற்சியகத்தில் நேற்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு,40 பெண்கள், 46 ஆண்கள் என 86
டிஎஸ்பிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
காவல் துறை அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் பேசும்போது, ‘தீயதை பொசுக்கும் தீயாகவும், அனைவருக்கும் பொதுவான வானமாகவும் காவல் துறை இருக்க வேண்டும்.
குற்றங்களுக்குத் தண்டனை பெற்று தரும் துறையாக மட்டும் இல்லாமல் குற்றங்களே நிகழாமல் தடுக்கும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். மக்களை காக்கும் மகத்தான பணிக்கு காவலர்கள் தங்களை ஒப்படைக்க வேண்டும். அரசாங்கத்தில் உள்ள எத்தனையோ துறைகளில் காவல்துறையும் ஒன்று என நீங்கள் நினைக்கக் கூடாது. அரசிடம் இருந்து மக்கள் முதலில் எதிர்பார்ப்பது அமைதியைத்தான்.
அந்த பொறுப்பு காவல்துறைக்கு தான் உள்ளது. புதிதாக பொறுப்பேற்கும் துணை கண்காணிப்பாளர்கள், தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். அவரது உழைப்பால் இன்று டிஜிபியாக உயர்ந்திருக்கிறார். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் காவல்துறையினர் உறுதியாக இருக்க வேண்டும்.
அனைத்தையும் மிஞ்சியதாக சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர். இணையவழி மூலம் பாலியல், நிதி சார்ந்த குற்றங்கள் தற்போது அதிகமாகி வருகிறது. சைபர் குற்றங்களை தடுக்க நவீன தொழிநுட்பங்களை காவல்துறை தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், லுங்கி கட்டிக்கொண்டு கழுத்தில் கர்சீஃப் கட்டிக்கொண்டிருந்தால் வழிப்பறி திருடன் என்பதை போல ஒரு காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூன் போடுவார்கள். ஆனால் இப்போது இணைய வசதி வந்தபிறகு அடையாளமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர். அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சைபர் குற்றங்களை தடுத்து வருகின்றனர்.
அதேபோன்று தமிழக காவல்துறையிலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும்’ என்றார்.
மேலும், ரூ.10.28 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த சைபர் பயிற்சி வளாகக்கட்டிடத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்தநிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறைச் செயலாளர் பிரபாகரன், டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குநர் பிரதீப் வி.பிலிப் நன்றியுரை ஆற்றினார்.
செய்தி: S.MD.ரவூப்